Published : 06 Oct 2014 10:37 AM
Last Updated : 06 Oct 2014 10:37 AM

ஐஎஸ்ஐ உளவாளியை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல்: இலங்கையை தொடர்புப்படுத்தக் கோருகிறது மலேசியா

மலேசியாவில் கைது செய்யப்பட் டுள்ள ஐஎஸ்ஐ உளவாளி முகமது ஹுசைன் முகமது சுலைமானை, தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம், பெங்களூரிலுள்ள இஸ்ரேல் துணைத் தூதரகங்களை வேவு பார்த்தது, மாலத்தீவிலிருந்து கேரளத்துக்கு தீவிரவாதிகளைப் படகில் அனுப்பி, அவர்கள் மூலம் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முகமது ஹுசைன் முகமது சுலைமான் மீது சுமத்தப்பட்டுள்ளன.

முகமது ஹுசைன் முகமது சுலைமான் இலங்கையைச் சேர்ந் தவர். ஐஎஸ்ஐ உளவாளியான இவர் கடந்த மே மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய சிறப்பு காவல்படையால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் ஹுசைன் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.

இந்தியா- மலேசியா இடையிலான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை நாடு கடத்தும்படி இந்தியா கோரியிருந்தது. சுலைமானுக்கு எதிராக சர்வதேச காவல்துறையான இன்டர்போல் மூலம் இந்தியா நோட்டீஸ் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மலேசியா சட்ட அமலாக்க அமைப்புகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளன. சுலைமான் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இவ்விவகாரத்தில் இலங்கையையும் இணைக்க மலேசியா விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சுலைமானை இந்தியாவுக்கு நாடுகடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x