

கர்நாடக அரசின் 'ஷாதி பாக்யா' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெல்காமில் உள்ள சட்டசபையில் (சுவர்ண சவுதா) அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட 'ஷாதி பாக்யா' திட்டம், சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இஸ்லாமிய பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க வகை செய்கிறது. இந்தத் திட்டத்தை அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி முதல் நவம்பர் 24-ஆம் தேதி வரை பெங்களூரில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சட்டசபையில் தர்ணா
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை பெல்காமில் தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தில் எடியூரப்பா தனது கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து கொண்டார்.
கூட்டத்தொடர் தொடங்கியதும் அவையின் மையப்பகுதிக்கு வந்த அவர், 'ஷாதி பாக்யா' திட்டத்தை அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நியாயவிலையில் அரிசி, கோதுமை வழங்க வேண்டும்'' என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் சபாநாயகர் காகோடு திம்மப்பா அவையை ஒத்தி வைத்தார்.
செவ்வாய்க்கிழமை அவை கூடியதும் வழக்கம் போல எடியூரப்பா அவையின் மையப் பகுதிக்கு வந்து, ''அரசு என்னுடைய போராட்டத்திற்கு செவிசாய்க்கும் வரை இரவு பகல் பாராமல் போராடுவேன்'' எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
எதிர்கட்சிகளின் ஆதரவு
எடியூரப்பாவின் தர்ணா போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி, பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமுலு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். நாள் முழுவதும் எதிர்க்கட்சிகள் கர்நாடக அரசை நிர்பந்திக்கும் வகையில் குரல் எழுப்பின.-நமது நிருபர்