

குஜராத் மீனவர்களைப் பிடிக்க எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ் தான் கடலோர காவல் படையின் ரோந்து படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கடலில் தத்தளித்த 2 பாகிஸ்தான் அதிகாரிகளை இந்திய மீனவர்கள் மீட்டனர்.
இதுகுறித்து குஜராத் மாநில மீனவர் வட்டாரங்கள் கூறியதாவது:
குஜராத்தின் கட்ச் மாவட்டம் ஜாக்ஹா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பு இந்திய எல்லை கடல் பகுதிக்குள் சுமார் 10 விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்யும் நோக்கில் பாகிஸ்தான் கடலோர காவல் படை அதிகாரிகள் அதிவேக ரோந்து படகுகளில் விரட்டினர். அப்போது சுமார் 10 கடல் மைல் தொலைவுக்கு இந்திய எல்லைக்குள் அவர்கள் நுழைந்தனர்.
இந்திய மீனவர்களில் சிலரை கைது செய்தனர். மேலும் சில படகுகளைத் தொடர்ந்து துரத்தினர். அப்போது ஒரு ரோந்து படகு இந்திய படகு மீது மோதி உடைந்தது. இதில் 6 பாகிஸ்தான் அதிகாரிகள் கடலில் மூழ்கினர். அந்த நேரத்தில் பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய மீனவர்கள் கடலில் குதித்து 2 பேரை மீட்டனர். 4 பேரை காணவில்லை.
எனினும் 10 படகுகளையும் 60 இந்திய மீனவர்களையும் பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்து கராச்சிக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே தகவல் அறிந்து இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மீனவர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பாகிஸ்தான் அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்கள் பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கடலில் தத்தளித்த 2 அதிகாரிகளை இந்திய மீனவர்கள் மீட்டதாலும் 3 பேரின் உடல்களை ஒப்படைத்ததாலும் அதற்கு பிரதிபலனாக 60 இந்திய மீனவர்களையும் 10 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர காவல் படை விடுவித்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.