Published : 13 Apr 2017 01:15 PM
Last Updated : 13 Apr 2017 01:15 PM

இடைத்தேர்தல் முடிவு: டெல்லி, ம.பி., அசாம், இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், அசாம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களில் மொத்தம் 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, மேற்கு டெல்லி ரஜோரி கார்டன் இடைத்தேர்தலில் பாஜக - சிரோன்மனி அகாலிதல் கூட்டணி வேட்பாளர் மஜிந்தர் சிங் சிர்ஸா 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் 2-ம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றி தொடர்பாக பாஜகவின் மஜிந்தர் சிங், "இடைத்தேர்தல் முடிவு ஆம் ஆத்மி கட்சியை மக்கள் புறக்கணிப்பதை உறுதி செய்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி முடியும் தருணம் நெருங்கிவிட்டது" என்றார்.

வரும் 23-ம் தேதி டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவின் வெற்றி ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ம.பி.,யில் வெற்றி:

மத்தியப் பிரதேச மாநிலம் பங்கதவ்கர் சட்டப்பேரவை தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டுள்ளது. பாஜக வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 25,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

அசாமிலும் வெற்றி:

அசாம் மாநிலத்தில் தேமாஜி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ரனோஜ் பேகு 75,217 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இத்தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ., பிரதான் பருவா லக்மிபூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இமாச்சலப் பிரதேசத்தில் போரஞ் தொகுதியில் 8,290 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அனில் திமான் வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x