

தற்போதைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி என்ன பேசினாலும் அது சர்ச்சையாகிவிடும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜனின் பதவி காலத்தில் அவர் கூறிய கருத்துகள் பல சர்ச்சைக்குள்ளாயின. `மேக் இன் இந்தியா’ பற்றியும் ராஜன் கூறியிருந்தார். அந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் ராஜன் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
பிரதமரை பற்றி கேட்கிறீர்கள் என்பதால் இந்தக் கேள்வியை நான் தவிர்க்கிறேன். இந்த கேள்விக்கு நான் என்ன பதில் அளித்தாலும் அது சர்ச்சையில்தான் முடியும். அரசியலுக்கு வருவீர்களாக என்று கேட்கிறீர்கள். நான் அரசியலுக்கு வருவதை என் மனைவி விரும்பமாட்டார். அதனால் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை.
என்னைப்பற்றி ஊடகங்கள் ராக்ஸ்டார் கவர்னர் என்று சொல்வது அதீதமான வார்த்தை. அப்படி நான் இல்லை. பரபரப்பில்லாத வழக்கமான மனிதன் நான். தவிர ஊடகங்கள் விரும்பத்தக்க மனிதர் என்று கூறுகின்றன. 53 வயதில் கூறுவதை விட 25 வயதில் கூறியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
அரசாங்கத்தின் மீது நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சனங்களை எங்குமே வைக்கவில்லை. ஆனால் சிலர் என்னுடைய பேச்சுகளை அவர்களுக்கு தகுந்தது போல் புரிந்துகொள்கின்றனர் என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு சேவைத்துறையில் புதிய யோசனைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அது குறித்து கூறுகையில், இந்தியா சேவை துறையில் பலம் வாய்ந்த நாடு. இதில் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்த பிறகு புதிய யோசனைகளால்தான் வளர முடியும். புதிய யோசனைகள் கிடைக்க வேண்டும் என்றால் வழக்கமாக இல்லாமல் புதிய சிந்தனைகளையும் சகித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலமே வளர வேண்டும். அதேபோல சமூகம் மேம்பட வேண்டும் என்றால் புதிய யோசனைகளை வரவேற்க வேண்டும் என்று ராஜன் கூறினார்.