Published : 04 Nov 2013 09:27 AM
Last Updated : 04 Nov 2013 09:27 AM

ராஜஸ்தான் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கெலோட், பூனியா போட்டி

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 63 பேர் அடங்கிய வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சி சனிக்கிழமை இரவு வெளியிட்டது.



சர்தார்புரா தொகுதியில் அசோக் கெலோட்டும், வடக்கு கோடா தொகுதியில் அமைச்சர் சாந்தி தரிவாலும், மாதோபுர் தொகுதியில் சட்டமன்றத் தலைவர் தீபேந்திர சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.

சதால்பூர் தொகுதியில் வட்டு எறிதல் விளையாட்டு வீராங்கனை கிருஷ்ணா பூனியா போட்டியிடுகிறார். இவர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் சுரு பகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் அக்கட்சியில் முறைப்படி சேர்ந்தார்.

அமைச்சர்கள் ராஜேந்திர பரீக் (சிகார்), பி.கே.சர்மா (கவாமகால்), ஏ.ஏ.கான் (திஜாரா), அசோக் பைரவா (காந்தார்), மகேந்திரஜித் சிங் (பாகிதோரா), ராஜஸ்தான் நிதி ஆணையத் தலைவர் பி.டி.கல்லா (மேற்கு பிகானீர்) தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

மொத்தம் 200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தான் சட்ட மன்றத்துக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது.

மிசோரம் பட்டியல்...

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. செர்ச்சிப், ராங்டர்ஸோ ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் லால் தன்ஹாவ்லா போட்டியிடுகிறார். சட்டமன்ற முன்னாள் தலைவர் ஹைபெய், லாய் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் முன்னாள் முதன்மை செயல் உறுப்பினர் சி. கன்தியான்சன்கா உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எப்), எம்.பி.சி., எம்.டி.ஆப். ஆகிய கட்சிகளின் கூட்டணி தரப்பில் 12 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. மிசோரமில் மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 8 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x