

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா கலவரத்துக்கு காரணமான ‘போஸ் சேனா’ அமைப்பினர் தர்ணா போர்வையில் 260 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்திருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில் டெல்லி-மதுரா நெடுஞ்சாலையில் ஜெய் குருதேவ் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தை நிறுவியவர் ஜெய் குருதேவ். அவரது ஆரம்ப கால வாழ்க்கை குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் கடந்த 1975-ல் உத்தரப் பிரதேசத்தில் எல்லோரையும் அவர் திரும்பி பார்க்கச் செய்தார்.
1975 ஜனவரி 13-ம் தேதி கான்பூரின் நானாராவ் பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தோன்றி உரையாற்றுவார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தாரா, உயிர் தப்பினாரா என்ற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் நானாராவ் பூங்காவில் குவிந்தனர்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஜெய் குருதேவ் தோன்றினார். நான் தான் சுபாஷ் சந்திர போஸ் என்று அறிவித்தார். ஆத்திரமடைந்த மக்கள் அவரை நோக்கி காலணிகளையும் கற்களையும் வீசினர். அந்த இடத்தில் இருந்து ஜெய்தேவ் வெளியேறிவிட்டார்.
ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே உத்தரப் பிரதேசத்தில் மிக பிரபலமான சாமியாராக அவர் உருவெடுத்தார். டெல்லி-மதுரா நெடுஞ்சாலையில் தாஜ்மஹாலுக்கு இணையாக மிகப்பெரிய ஆசிரமத்தை கட்டினார். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆசிரம கிளைகள் தொடங்கப்பட்டன.
1980-90 களில் தூர்தர்ஷி என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் அந்த கட்சி கடைசிவரை எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை.
கடந்த 2012 மே 18-ம் தேதி ஜெய் குருதேவ் உயிரிழந்தார். அப்போது அவருக்கு 116 வயது என்று கூறப்படுகிறது. அவர் சாகும்போது ஆசிரம நிலங்களின் மதிப்பு ரூ.4000 கோடி. மேலும் ரூ.150 கோடி மதிப்பில் கார்கள் இருந்தன. நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஜெய் குருதேவ் மீது 13-க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன.
ஆசிரமத்தில் பிரிவினை
ஜெய் குருதேவின் ஆதரவாளர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டு ராம் விரக் ஷா யாதவ் என்பவர் தலைமையில் ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரஹி என்ற புதிய குழு உருவாகியுள்ளது. சுபாஷ் சந்திர போஸின் உண்மையான தொண்டர்கள் என்று கூறிக் கொள்ளும் அவர்கள் உள்ளூரில் போஸ் சேனா என்று அழைக்கப்படுகின்றனர்.
அவர்கள்தான் 2014-ம் ஆண்டில் மதுரா ஜவஹர் பாத் பகுதியை ஆக்கிரமித்து தர்ணா நடத்தினர். போராட்டம் என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக அங்கேயே குடியிருந்தும் வருகின்றனர். அந்த இடத்தில் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்று வந்துள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும், 60 லிட்டர் பெட்ரோல், 40 லிட்டர் டீசலை தலா ரூ.1-க்கு விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போஸ் சேனா அமைப்பினர் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரா சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியபோது, 2 நாட்கள் தர்ணாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் போஸ் சேனா அமைப்பினர் கடந்த 2 ஆண்டுகளாக அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதற்கு சில அரசியல் கட்சிகளும் உடந்தை என்று குற்றம் சாட்டினர்.
டிஜிபி விளக்கம்
இதுகுறித்து மாநில டிஜிபி ஜாவித் அகமது கூறியதாவது: அரசியல் நிர்பந்தம் காரணமாக போஸ் சேனா அமைப்பினரை வெளியேற்றவில்லை என்று கூறு வது பொய். அவர்களை அமைதி யான முறையில் வெளியேற்றவே மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இதில் போலீஸ் உளவுத் துறையையும் குறை சொல்ல முடியாது. சம்பவத்துக்கு காரணமானர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.