Published : 09 Sep 2016 05:03 PM
Last Updated : 09 Sep 2016 05:03 PM

மும்பை மாநகராட்சி மீது லஞ்சப் புகார்: நடிகர் கபில் சர்மா ட்வீட்டும் பதில்களும் கிளப்பிய சர்ச்சை!

பிரபல நடிகர் மற்றும் காமெடியரான கபில் சர்மா, சிவசேனா மற்றும் பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி லஞ்சம் கேட்பதாக ட்வீட் செய்து அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கிறார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் யுவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும், இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கபில் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் கடந்த ஐந்து வருடங்களாக, 15 கோடி ரூபாய் வருமான வரி கட்டியிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய அலுவலகத்தை உருவாக்குவதற்காக 50 லட்ச ரூபாயை மும்பை மாநகராட்சிக்கு லஞ்சமாக தர வேண்டியிருக்கிறது'' என்று கூறி அதைப் பிரதமரின் கவனத்துக்கு உட்படுத்தி இருந்தார்.

மோடியிடம் இதற்குத் தீர்வு கிடைக்குமா என்று தனது அடுத்த ட்வீட்டில் கேட்டிருந்தார். இதற்கு சுமார் 3 மணி நேரத்துக்குள் பதிலளித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ''கபில் தயவுசெய்து அனைத்துத் தகவல்களையும் அளியுங்கள். மும்பை மாநகராட்சியைத் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கூறியிருக்கிறோம். குற்றவாளியைத் தப்ப விட மாட்டோம்'' என்று பதிவிட்டார்.

குற்றச்சாட்டு தொடர்பாக யுவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரேவும் பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், ''மும்பை மாநகராட்சி மற்றும் மேயரை உங்களுக்கு உதவச் சொல்லியிருக்கிறோம். அவர்கள் ஊழலுக்கு எதிராக உங்களை வழிநடத்துவார்கள். அதற்கு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியின் தகவலை நீங்கள் தரவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மும்பை மாநகராட்சி இன்று (வெள்ளிக்கிழமை) உடனடி செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இதில், ''கபிலின் குற்றச்சாட்டு முக்கியமானது. அவரிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியின் பெயரைக் கேட்டிருக்கிறோம். இதுவரை எந்த புகாரையும் அவர் அளிக்கவில்லை'' என்று கூறப்பட்டது.

ஆனால், மும்பை மாநகராட்சியின் அதிகாரி ஒருவரின் கூற்றின்படி, கபிலின் அலுவலத்தின் நடைபெற்ற முறைகேடான கட்டுமானப்பணிகளை நிறுத்தும்படி அவருக்கு ஆகஸ்ட் மாதத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதுவே அவரை கோபமடையச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தப் பிரச்சனைக்கு முதல்வரின் உடனடியாக பதிலளித்தது குறித்து எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மாநில கவுன்சிலின் எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டே தனது பதிவில், ''முதல்வர் இதற்கு முன்னால் மும்பை மாநகராட்சிக்கு எதிராக எழுந்த புகார்களுக்கெல்லாம் பதில் சொல்லவில்லை. சர்மா வழக்கு உள்ளிட்ட சாமானிய மனிதர்களின் பிரச்சனைகளை அவர் கண்டுகொள்வதில்லை'' என்று சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x