

தீவிரவாத விவகாரத்தில் அரசு எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்று கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆதரவு எல்லை தாண்டிய ஊடுருவலே காஷ்மீர் வன்முறைகளுக்குக் காரணம் என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வரும் அமைதியற்ற சூழல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்தவுடன் புதுடெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
சிறுவர்கள், இளைஞர்களை அழைக்கும் பிரச்சினைக்குரியவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
காஷ்மீரில் 1989-ம் ஆண்டு முதல் 90 கையெறி குண்டுகள், 5,000 கிரனேடுகள், 90 இலகு ரக எந்திரத் துப்பாக்கிகள், 350 ஏவுகணை செலுத்திகள் மற்றும் 34,000 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீரில் அரசியல் நடைமுறைகள் ஜனநாயக ரீதியில் ஊக்குவிக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறிய போது, காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தியை கலந்தாலோசித்த பிறகு அனைத்துக் கட்சிக் குழு ஒன்று அங்கு செல்லும் என்றும் ஆனால் இது இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றார்.
அருண் ஜேட்லி கூறியதாவது:
பெல்லட் துப்பாக்கிகள் குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து வருகிறது. பாதுகாப்பு உள்ளீடுகளையும் ஆராய வேண்டியுள்ளது. பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளன, ஆனால் இம்முறை ஜூலை 8-க்குப் பிறகு அதிகரித்துள்ளது. 2010-முதல் பெல்லட் துப்பாக்கிகள் அங்கு உபயோகத்தில் இருந்து வருகிறது.
இவ்வாறு கூறிய ஜேட்லி, ஹூரியத்துடன் பேச்சு வார்த்தைகள் பற்றி கூறியபோது, “பாதுகாப்பைப் பொறுத்தவரையில் குறைப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை. பயங்கரவாதமும், வன்முறையும் திறமையுடன் எதிர்கொள்ளப்படும்” என்றார்.