

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை விமர்சித்துவந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளார்.
ரகுராம் ராஜன் மனதளவில் முழு இந்தியர் அல்ல; எனவே அவரை ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முதன் முதலில் சர்ச்சையைக் கிளப்பியவர் சுப்பிரமணியன் சுவாமி.
சர்ச்சைகள் முற்றி, 'இரண்டாவது முறையாக ஆர்பிஐ கவர்னராக விரும்பவில்லை' என தனது சக ஊழியர்களுக்கு ராஜனே கடிதம் எழுதும் நிகழ்வும் நடந்துவிட்டது.
ராஜன் அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட எல்லா ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளிவைத்துவிட்ட நிலையில் தற்போது சு.சுவாமி தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியம் மீது தன் பார்வையைத் திருப்பியுள்ளார்.
அர்விந்த் சுப்பிரமணியன் அடுத்த ஆர்பிஐ கவர்னராவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் மீது சரமாரியாக ட்விட்டரில் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
சுவாமியின் ட்வீட்கள்:
ட்வீட் 1:
அமெரிக்க மருந்து உற்பத்தி, விற்பனை துறை நலனைப் பேண வேண்டுமானால் இந்தியாவுக்கு எதிராக சில முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை கூறியது யார் தெரியுமா? அர்விந்த் சுப்பிரமணியன் (தற்போதைய தலைமை பொருளாதார ஆலோசகர்) அவரை நீக்குங்கள்!
ட்வீட் 2:
ஜிஎஸ்டி-க்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் இவ்வளவு நெருக்கடி தர ஊக்குவித்தது யார் தெரியுமா? அது ஜேட்லியின் ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன்- வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்தவர்.
இவ்வாறாக அர்விந்த் சுப்பிரமணியத்துக்கு எதிராக ட்வீட்களை பதிவு செய்துள்ளார் சு.சுவாமி.
எதிர் ட்வீட்கள்:
சுப்பிரமணிய சுவாமியின் இந்த ட்வீட்டுக்கு பதில் ட்வீட்களும் வந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, "தற்போது ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சன வட்டத்துக்குள் சிக்கியிருக்கிறார் அர்விந்த் சுப்பிரமணியன். ஆனால் உண்மையாக குறிவைக்கப்பட்டுள்ளவர் அருண் ஜேட்லியே" எனக் குறிப்பிட்டுள்ளார்.