காங். தோல்விக்கு விலைவாசிதான் முக்கிய காரணம்: ப.சிதம்பரம்

காங். தோல்விக்கு விலைவாசிதான் முக்கிய காரணம்: ப.சிதம்பரம்
Updated on
1 min read

நடந்து முடிந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு, விலைவாசி உயர்வுதான் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று நடந்த பொருளாதார மாநாட்டில் அவர் பேசும்போது, "பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு விலைவாசி உயர்வு முக்கியக் காரணம். இதன் எதிரொலியாக மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் நடந்து முடிந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

வேளாண் விளை பொருள்களுக்கான ஆதார விலை அதிகரித்தது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட வாதங்கள் ஏழை மக்களிடம் எடுபடவில்லை.

பணவீக்கம் மற்றும் விலை உயர்வுக்கு அரசுதான் காரணம் என்ற பொதுவான அபிப்ராயத்தின் எதிரொலிக்கான விலையை ஆளும் மத்திய அரசு கொடுத்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் அரசின் பிரதான நோக்கமாகும். இந்த விஷயத்தில் அரசு புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. அறுவடை, சந்தைப்பதுத்தல் ஆகிய விஷயங்ளில் பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

வேளாண் பொருள்களை அதாவது அத்தியாவசியப் பொருள்ளை வாங்குவது அதை சந்தைப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பான சட்ட விதிகள் அனைத்தும் மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது.

இவை தொடர்பான அறிக்கை வெளியிடுவது அதை அமலாக்கம் செய்வது உள்ளிட்டவை மாநில அரசுகளின் கடமையாகும். ஆயினும் மாநில அரசுகள் இந்த சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன.

இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் செயல்படாத நிலையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிகிறது. மத்திய அரசு தனது அதிகாரத்துக்குட்பட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என்றார் ப.சிதம்பரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in