Published : 14 Oct 2014 08:43 AM
Last Updated : 14 Oct 2014 08:43 AM

ஹுத்ஹுத் புயலுக்கு 21 பேர் பலி; 170 பேரை காணவில்லை; 6 ஆயிரம் வீடுகள் சேதம்

ஆந்திர மாநிலத்தில் ‘ஹுத் ஹுத்’ புயல் தாக்குதலுக்கு இது வரை 21 பேர் பலியானதாகவும், 170 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஆந்திர அரசு அதிகாரபூர் வமாக அறிவித்துள்ளது. விசாகப் பட்டினத்தில் தொடர் மழை காரணமாக சீரமைப்பு பணிகள் தடைபட்டுள்ளன.

வங்க கடலில் மையம் கொண்ட ‘ஹுத் ஹுத்’ புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த இந்த புயல் கடலோர ஆந்திராவை பெரிதும் பாதித் துள்ளது. புயலின் பாதிப்பால் விஜயநகரம், விசாகப்பட்டினம், காகுளம் ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சீரமைப்பு பணிகள் தடைபட்டுள்ளன.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் 24 பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று பெய்த மழைக்கு விஜயநகரம் மாவட்டத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை ‘ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் மட்டும் விசாகப்பட்டினத்தில் 15 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 5 பேர், காகுளம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளதாக ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.

கடலோர ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், விஜயநகரம், காகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அதிகாரிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்கட்ட அறிக்கையை வழங்கினர்.

170 பேர் மாயம்

புயல் காரணமாக 170 பேரின் நிலை என்னவானது எனத் தெரிய வில்லை. அவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

புயல் சீற்றத்தில் இருந்து 146 பேரை வருவாய் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் காப்பாற்றி உள்ளனர்.

பெருத்த சேதம்

புயல் காரணமாக 6,039 வீடுகள் இடிந்துள்ளன. 5,216 மின் கம்பங்கள், 600-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உடைந்து சேதமடைந்தன. 109 இடங்களில் ரயில் தண்டவாளங்கள், சாலைகள் பழுதடைந்தன. 1,672 மாடுகள் இறந்தன. சாலையோரம் மற்றும் வீடுகளில் இருந்த 93,000 மரங்கள் உடைந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்தன. 609 குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 104 படகுகள் சேதமடைந்துள்ளன.

இது தவிர ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு, நெல், பருத்தி, வெற்றிலை போன்ற பயிர்களும், காய்கறி தோட்டங்களும், தென்னை, வாழை மரங்களும் நாசமடைந்தது. இதுகுறித்து அதிகாரிகள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இவை தவிர, வாகனங்கள், செல்போன் டவர்கள், வணிக வளாக அறிவிப்பு பலகைகள் போன்றவையும் சேதமடைந்தன. புயல் காரணமாக சேதமடைந்த பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தனி விமானத்தில் சென்று பார்வையிட்டார். அவருடன் துணை முதல்வர் சின்ன ராஜப்பா, அமைச்சர்கள், அதிகாரிகள் சென்றனர்.

பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டார்.

புயல் பாதிப்பு காரணமாக நேற்றும் பல ரயில்களை தென்மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. சாலைகள் பழுதடைந்துள்ளதால் போக்கு வரத்து பெரிதும் பாதிப்படைந்தது. சாலையில் விழுந்துள்ள மரங்கள், மின் கம்பங்களை அப்புறப்படுத்தும் பணி நடக் கிறது.

மோடி இன்று வருகை

புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் சந்திரபாபுவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். பிரதமர் மோடி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட இன்று ஆந்திரம் வருகிறார். அவர் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு விஜயவாடாவில் இருந்து தனி விமானத்தில் சென்று ஆந்திரா, ஒடிஸாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x