

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், மாநில ஆயுதப்படை வீரர் ஒருவரை நக்ஸல்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பஸ்தார் பகுதி காவல் துறை ஐஜி எஸ்ஆர்பி கல்லுரி நேற்று கூறியதாவது: ஆயுதப்படை வீரரான சிவகுமார் சிதாருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லை. இதையடுத்து சிகிச்சைக்காக டெமல்வாடாவிலிருந்து டோர்ன் பாலுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். சீருடை அணியாமலும் ஆயுதமின்றியும் தனியாக பயணம் செய்தார்.
இந்நிலையில், ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் அந்த பஸ்ஸை இடைமறித்து சிதாரை கடத்திச் சென்றனர். பின்னர் சிதாரை கொலை செய்த அவர்கள், சடலத்தை சாலையோரம் போட்டுவிட்டுச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றினர். தப்பி ஓடிய நக்ஸல்களை தேடி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.