

தமிழகம், தெலங்கானா, மே.வங்க மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு: புதுச்சேரி, கேரளாவில் முடங்கியது போக்குவரத்து
*
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் குறிப்பிடும் அளவுக்கு பாதிப்புகள் இல்லை. ஆனால், மேற்குவங்கம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பகுதி பாதிப்பு இருக்கிறது.
தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் எதிரான மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 70 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மங்களூரு, மைசூருவில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கவில்லை. ஒரு சில கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆனால், அவற்றிலும் மாணவர்கள் வருகைப் பதிவு மிகக் குறைவாகவே இருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் பரவலாக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
புதுச்சேரியில் போக்குவரத்து ஸ்தம்பித்து
பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதுச்சேரியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தனியார் பேருந்து, ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வில்லியனூர் சுல்தான்பேட்டை ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கிய வேன், தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பந்த் காரணமாக கடைகள் முடப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி நேரு வீதி| படம்: எம்.சாம்ராஜ்.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. திரையரங்குகள் பகல் நேரக் காட்சிகளை ரத்து செய்துள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
புதிய பேருந்து நிலையம், இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, வில்லியனூர், பாகூர் உள்ளிட்ட 7 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. முக்கிய வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை பிரதான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
கேரளா முடங்கியது:
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து வேலைநிறுத்தம் அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், கேரளாவில் முழுவீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கேரளாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் முற்றிலுமாக இயங்கவில்லை. தனியார் வாகனங்கள் ஒன்றிரண்டு இயங்குகின்றன. கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
பிராட்வே பகுதியில் மூடப்பட்ட கடைகள்: படம்: ஹெச்.விபு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சிவன் குட்டி தலைமையில் ஒரு குழுவினர் இஸ்ரோ மையத்தின் பிரதான வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அம்மையத்தில் வேலை பார்க்கும் 6000 பேரும் பணிக்குச் செல்ல முடியவில்லை. மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
வேலைநிறுத்தம் ஏன்?
வேலை நிறுத்தம் குறித்து 15 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம், "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பொதுத் துறையின் பங்குகளை விற்பதை கைவிட வேண்டும், அனைத்து பகுதிநேர ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஆனால், மத்திய அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சையாக குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.350 என்று அறிவித்து அதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
15 தொழிற்சங்கங்கள்:
இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் 11 மத்திய, 4 மாநில தொழிற்சங்க ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக உட்பட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன. மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை கைவிடக் கோரி தமிழ்நாடு சாலை போக்குவரத்து பாதுகாப்புக் குழுவும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறது.
வெங்கய்ய நாயுடு கண்டனம்:
இன்றைய வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "குறைந்தபட்ச ஊதியத்தை அரசு 42% வரை உயர்த்தி இருந்தும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது முரண்பாடானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனால் நாட்டில் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்" என்றார்.