

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி போவெல், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
இதன் மூலம், 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்திற்குப் பின்னர் நிலவி வந்த மோடி மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோடி, நான்சி போவெல் சந்திப்பு இந்த மாதத்திலேயே நடைபெறும் என்றும், நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும் என நான்சி போவெல் தாமாக முன்வந்து விருப்பத்தை தெரிவித்தார் எனவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்திப்பு நடைபெறும் தேதி உறுதி செய்யப்படவில்லை என்றார் அவர்.
மேலும் கூறுகையில்: "இந்தியா - அமெரிக்கா நட்புறவை பறைசாற்றும் வகையில் மூத்த அரசியல் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்களுடன் கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்க தூதர் சந்திப்புகள் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் இந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மோடி - போவெல் சந்திப்பு அகமதாபாத்தில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா எடுத்துள்ள முயற்சிக்கு பின்னால், வெள்ளை மாளிகை நிர்வாக மட்டத்தில் பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவேற்பு:
மோடியை அமெரிக்க தூதர் போவெல் சந்திப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு வாழ் நண்பர்கள் குழுமத்தின் அமெரிக்காவுக்கான தலைவர் சந்திரகாந்த் படேல் கூறுகையில்: "அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியிறவு அமைச்சர் ஜான் கெர்ரியின் இந்த முடிவை வரவேற்கிறோம், இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பலப்பட வழி வகுக்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி தற்போது மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்கிறார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றங்கள் அவருக்கு விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மோடியுடன் நட்பு பாராட்டாவிட்டால் அது சரியாகாது, என்றார்.
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் அடிப்படையில் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க விசா கடந்த 2005-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.