

'புதுவை மாநில அந்தஸ்து - ஓர் ஆய்வு' என்ற நூலின் வெளியீட்டு விழா புதுவையில் புதன்கிழமை இரவு நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும் எம்.பி.யுமான ராஜா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. எதிர்காலத்தில் இங்கு யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். மாநில அந்தஸ்து எனக்கு மட்டும் சொந்தமானதல்ல. எதிர்காலத்திலும் மாநில வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக மாநில அந்தஸ்து இருக்கும்.
சட்டப்பேரவையில் மக்களுக்காக அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. மாநில மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதில் தற்போது அதிகாரத் தடையுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு, ஒடச் சொன்னால் எப்படி ஓட முடியும்? மாநில அந்தஸ்துக்கு நாம் அனைவரும் போராடுவது அவசியம்.
மத்திய அரசில் அதிகாரத்தில் இருப்பவர்கள் புதுவை மாநில அந்தஸ்துக்காக போராட தவறி விட்டனர். புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர், புதுவை மக்களை பற்றியோ, மாநில வளர்ச்சி பற்றியோ சிந்திக்காதது ஏன்? புதுவை எதிர்காலம் பற்றி சிந்தனை அவருக்கு இல்லை என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன், நூலாசிரியரான புதுவை பல்கலைக்கழக இயக்குநர் ராமதாஸ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.