எம்.எல்.ஏ.க்களின் எம்.பி. ஆசை- ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் திடீர் பிளவுக்குக் காரணம்
பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக விரும்புகின்றனர். இதற்கு லாலு, வாய்ப்பு தராததே அவரது கட்சியில் ஏற்பட்ட திடீர் பிளவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் காங்கிரஸுடன் இணைந்து களம் காண்கிறது. பிஹாரில் உள்ள 40 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடும் எனத் தெரிகிறது.
லாலு கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர்வரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமக்கு அல்லது தம் உறவினர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
ஆனால், லாலு அவர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டார். இதில் அதிருப்தியடைந்தவர் களில் முக்கியமானவர் சாம்ராட் சௌத்ரி. கடந்த 23-ம் தேதி தன் தொகுதியை உள்ளடக்கியுள்ள ககரியா மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்காக பிஹார் முதல்வர் நிதீஷ் குமாருடன் ஹெலிகாப்டரில் சென்றார் சாம்ராட் சௌத்ரி.
பாட்னாவிலிருந்து அரை மணிப் பயணத்தின் போது நிதீஷ்குமார் அளித்த ‘உற்சாகம்’ 13 எம்.எல்.ஏ.க்களை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாகக் காட்டி கட்சியை உடைக்கத் தூண்டியிருக்கிறது.
சாம்ராட்டின் இந்த ‘உதவி’க் காக ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும், மற்ற சிலருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாகவும் ஆளும்கட்சித் தரப்பில் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாஜகவுடனான 17 ஆண்டு கூட்டணியை நிதீஷ் முறித்துக் கொண்டதால் தனித்துப் போட்டி யிடும் நிலை உருவாகியுள்ளது. லாலு கட்சியிலிருந்து தாவ நினைத்த எம்.எல்.ஏ.க்கள் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்றவர்கள். அவர்களை மக்கள வைத் தேர்தலில் போட்டியிட வைப்பதன் மூலம் லாலுவின் வாக்குகளையும் பிரிக்க முடியும், பாஜகவையும் தோற்கடிக்கலாம் என நிதீஷ் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், லாலு அதிரடியாகக் களமிறங்கி வெளியேற முயன்ற 13 பேரில் 9 பேரை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார். கட்சி உடைவதையும் தவிர்த்தார்.
இருப்பினும், லாலு தன் எம்.எல்.ஏக்கள் அல்லது அவர் களின் உறவினர்களில் சிலருக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. எப்படிப்பார்த்தாலும் நிதீஷ் இதில் ஆதாயமடைந்திருக்கிறார் என்பதுதான் அரசியல் நோக்கர் களின் கருத்து.
