Last Updated : 01 Apr, 2017 11:40 AM

 

Published : 01 Apr 2017 11:40 AM
Last Updated : 01 Apr 2017 11:40 AM

தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) நேரில் வந்து ஆதரவளித்தார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இவர்களை வந்து சந்திக்காமல் முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவது கண்டிக்கத்தக்கது.

வறட்சி நிவாரணம் பார்வையிட வந்த மத்திய குழுவினரிடம் தமிழக அரசு விவசாயிகளின் உண்மை நிலைகளை எடுத்துக் கூறாமல் மறைத்து விட்டது. அதிமுக ஆட்சியில் 250-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்தது மறைக்கப்பட்டு விட்டது" எனப் புகார் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்தர மோடி போராடி வரும் விவசாயிகளை நேரில் வந்து சந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய ஸ்டாலின், இதற்காக அவரை தான் சந்திக்க முயல்வதாகத் தெரிவித்தார்.

ஸ்டாலினுடன், ஜந்தர் மந்தரின் போராட்டக் களத்திற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், அதன் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜாவும் போராட்டத்திற்கு மூன்றாவது முறையாக நேரில் வந்து ஆதரவு அளித்தனர்.

டெல்லியில் 20-வது நாளாக இன்று தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் வங்கிக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவரணம் உட்படப் பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகித்து வருகிறார். ஆரம்பத்தில் கலந்துகொள்ள வந்த விவசாயிகள் நூறு பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் திரும்பி விட்டனர். இதற்கு, உடல்நிலை குன்றியது காரணம் ஆகும்.

எனினும், தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு, தமிழக விவசாயிகள் சங்கங்களில் கூட்டமைப்பு உட்பட வேறுபல சங்கங்களும் இந்த போராட்டத்தில் வந்து கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன், மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் இந்த போராட்டத்திற்கு கிடைத்து வருகிறது. இதனால், துவக்கத்தில் இருந்ததை விட கூடுதலான எண்ணிக்கையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x