

கர்நாடக மாநிலம் மைசூரில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 404 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இவ்விழா, மைசூர் மகாராஜா இல்லாமல் நிறைவடைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
15-ம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு உடையார் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த ராஜா உடையார் மைசூரை ஆண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போர்களில் தொடர் வெற்றி பெற்றதையொட்டி கி.பி. 1610-ம் ஆண்டு காவிரி கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் தசரா திருவிழாவை அரச விழாவாக கொண்டாடினார். அதனை தொடர்ந்து உடையார் வம்ச மகாராஜாக்கள் தீயசக்தியை வென்ற சாமூண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜை செய்து தசராவை கொண்டாடினர்.
ஜெயசாம ராஜேந்திர உடையார் தசரா திருவிழாவை உலகத் தரத்திற்கு உயர்த்தி, ஆங்கிலேய ஆளுநர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தார். 1972-ல் அவரது மறைவுக்கு பிறகு தசரா திருவிழா கர்நாடக அரசின் விழாவாக கொண்டாடப்படுகிறது. 404 ஆண்டுகளாக கொண்டாடப் படும் தசரா திருவிழாவை, இந்த ஆண்டு கடந்த 25-ம் தேதி ஞானபீட விருதுபெற்ற கன்னட எழுத்தாளரும், பிரபல நாடக ஆசிரியருமான கிரீஷ் கர்னாட் தொடங்கி வைத்தார்.
யானைகள் ஊர்வலம்
தசரா திருவிழாவில் அனை வரும் விரும்பி காணும் யானைகளின் ஊர்வலம் நேற்று மைசூர் அரண்மனையை சுற்றி நடைபெற்றது. அர்ஜூனா என்கிற யானையின் மீது வைக்கப்பட்டிருந்த 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூர் மகாராஜாவின் மனைவி ராணி பிரம்மோத தேவி மற்றும் கர்நாடக அமைச்சர்கள் பூக்களைத் தூவி வணங்கினர்.
மகாராஜா இல்லாத தசரா
தசரா விழாவை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூர் மகாராஜா ஸ்ரீகண்ட தத்த உடையார் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஸ்ரீகண்ட தத்த உடையார் காலமானார். அவரின் வாரிசு யார் என்பதை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர். எனவே, இம்முறை மகாராஜாவை நினைவுகூரும் வகையில் அரியாசனத்தில் பட்டத்து வாளை வைத்து ராணி பிரம்மோத மகாதேவி சிறப்பு பூஜை செய்தார். கடந்த 404 ஆண்டு கால மைசூர் தசரா திருவிழா வரலாற்றில் மகாராஜா இல்லாமல் விழா கொண்டாடப்படுவது இதுவே முதல்முறையாகும்.