Last Updated : 27 Jun, 2017 08:20 AM

 

Published : 27 Jun 2017 08:20 AM
Last Updated : 27 Jun 2017 08:20 AM

ஜனவரி முதல் டிசம்பர் வரை..: 2018 முதல் நிதியாண்டு மாறுகிறது - 150 ஆண்டு கால நடைமுறையில் மாற்றம் கொண்டு வருகிறது மத்திய அரசு

அடுத்த ஆண்டு முதல் நிதியாண்டை ஏப்ரல் மாதத்துக்கு பதில் ஜனவரிக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 150 வருடங்களாக ஏப்ரல் முதல் மார்ச் வரையில் நிதியாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி 2018-ம் ஆண்டிலிருந்து ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நிதியாண்டை கணக்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்ததையடுத்து நிதியாண்டை மாற்றுவதற்கு தேவையான பணிகளை மத்திய அரசு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு நிதியாண்டு ஜனவரிக்கு மாற்றப்பட்டால், இந்த ஆண்டு நவம்பர் மாதமே அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு மாற்றியது. இதன்படி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவம்பரில் பட்ஜெட் தாக்கல்

நிதியாண்டை மாற்றுவது தொடர் பான சட்ட வரைவு குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை டிசம்பர் மாதத்துக்கு முன்பு முடிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இப்போதைய நடை முறைகளின்படி பட்ஜெட் தொடர்பான செயல் முறைகள் முடிவதற்கு இரண்டு மாத காலம் ஆகிறது. எனவே, நிதி யாண்டு மாற்றப்படும் பட்சத்தில் வரும் நவம்பர் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1867-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது.

நிதியாண்டையும் காலண்டர் ஆண்டையும் இணைப்பதற்கு மோடி விருப்பம் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை நியமித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை நிதி யமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.

இதுபோல நிதியாண்டை மாற்றுவது அவசியம் என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது. இப் போது நிதியாண்டு கணக்கு நடை முறையால் வேலைச் சூழலை குறைந்த அளவே பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. மேலும் இப்போது நடைமுறையில் இருக்கும் நிதியாண்டு நடைமுறை நாட்டின் எந்தவொரு தேசிய கலாச்சார மற்றும் பாரம்பரிய ரீதியிலான காரணமும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சர்வதேச நடைமுறைக ளோடு இப்போதைய நிதியாண்டு கணக்கு ஒருங்கிணையவில்லை. இதனால் தகவல் சேகரிப்பு பாதிக் கப்படுகிறது என்று நிதி ஆயோக் உறுப்பினர்கள் விவேக் தேவ்ராய் மற்றும் ஓஎஸ்டி கிஷோர் தேசாய் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற நிதி நிலைக்குழு நிதியாண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை மாற்றுவதற்கு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரதமர் மோடி “கால நிர்வாகம் மோசமாக இருப்பதன் காரணமாக பல நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படு கிறது. இதனால் அந்த திட்டங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடைவ தில்லை” என்று ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

நம் நாட்டிலேயே முதன் முறையாக, மத்தியபிரதேச மாநிலம் ஜனவரி முதல் டிசம்பர் வரை என நிதி யாண்டை ஏற்கெனவே மாற்றியிருக்கிறது. இது 2018-ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற நாடுகளில்..

பிரிட்டனில் இன்னமும் நிதி ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை கணக்கிடப்படுகிறது. டிசம்பரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக இதை மாற்றவில்லை.

இதேபோல அமெரிக்காவில் அக்டோபர் 1-ம்தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நிதி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. அமெரிக்காவைப் பின்பற்றி அக்டோபரில் நிதி ஆண்டை தொடங்குகிறது கோஸ்டா ரிகா.

ஆஸ்திரியா, பிரேசில், சீனா, ஜெர்மனி, கிரீஸ், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நிதி ஆண்டு கணக்கிடப்படுகிறது.

ஆஸ்திரேலியா, எகிப்து நாடுகளில் ஜூலை மாதம் முதல் ஜூன் வரை நிதி ஆண்டு கணக்கிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x