

உத்தரப் பிரதேசம் முஸாபர்நகர் கலவரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக முஸ்லிம் தலைவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2013 ஆகஸ்ட் 31-ல் காலா பார் பஞ்சாயத்து கூட்டத்தில் வன்முறை யைத் தூண்டும் விதமாக பேசியதாக பகுஜன் சமாஜ் எம்.பி. கதிர் ராணா, எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மவுலானா ஜமீல் அகமது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சையது ஜமான், சல்மான் சையது, மதத் தலைவர்கள் ஆசாத் ஜமா, நவ்ஷாத் குரேஷி மற்றும் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஜாமீனில் விடுதலையாகி உள்ள னர். இந்த வழக்குகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் அவர்கள் அனைவர் மீதான வழக்குகளையும் வாபஸ் பெற உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் வழக்கு தொடர்பான விவரங்கள் கோரப்பட்டுள்ளன.