

கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரி உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ வில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பெங்களூரு போலீஸார் லக்னோவுக்கு விரைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பைரச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுராக் திவாரி (36). 2007-ம் வருட கர்நாடகா பேட்ஜ் ஐஏஸ் அதிகாரியான இவர், பெங்களூரு வில் உணவு மற்றும் நுகர் பொருள் துறை ஆணையராக பணியாற்றினார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உணவுத் துறை தொடர்பான பயிற்சிக்காக லக்னோவுக்கு சென்றார். கடந்த 10-ம் தேதியுடன் பயிற்சி நிறை வடைந்த நிலையில் கூடுதலாக 10 நாட்கள் விடுப்பில் இருந் துள்ளார்.
இந்நிலையில் திவாரியின் சடலம் லக்னோவில் சாலையோரம் இருந்தது நேற்று காலையில் தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஹஸ்ரத் கஞ்ச் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் திவாரியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சம்பவ இடத்தைப் பார்வையிட்ட லக்னோ மாநகர காவல் கண்காணிப்பாளர் தீபக் குமார் கூறும்போது, “கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரி கடந்த இரு தினங்களாக லக்னோ வில் உள்ள மீராபாய் அரசு விருந் தினர் விடுதியில் தங்கியுள்ளார். அவருடன் லக்னோ நகர வளர்ச்சி கழக ஆணையர் என்.பி.சிங்கும் தங்கி இருந்துள்ளார். இருவரும் ஒரே ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்றதால் நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை காலை 6 மணியளவில் என்.பி.சிங் பேட்மிண்டன் விளையாடுவதற் காக சென்றுள்ளார். இதையடுத்து நடைப்பயிற்சிக்கு சென்ற அனுராக் திவாரி விடுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்களில் சிலர் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.
அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள் ளது. அதேநேரம் அவரது கன்னத் தில் காயம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. உடலில் வெளிப் படையான காயங்கள் எதுவும் இல்லை. அனுராக் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, முழுமையான தகவல்கள் தெரியவரும். பிரேத பரிசோதனைக்கு பிறகு திவாரியின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
சித்தராமையா இரங்கல்
இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “திறமையான ஐஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரியின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், நண்பர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பின், உரிய முறையில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கர்நாடக உணவுத் துறை அமைச்சர் யு.டி. காதர் கூறும்போது, “அனுராக் குடும்பத்தினருடனும், உத்தரபிரதேச போலீஸாரிடமும் தொலைபேசி மூலமாக பேசினேன். அவரது பிறந்த நாளான நேற்றே (புதன்கிழமை), அவர் இறந்தது குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது” என்றார்.
இதனிடையே பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் அனுராக் திவாரியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று உத்தரபிரதேசத்துக்கு விரைந்துள்ளனர்.