

எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர்களை தாக்கியதாக, ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதியை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ட்விட்டர் மூலம் சோம்நாத் பாரதி வெளியிட்ட தகவலில், ‘நான் கவுதம் நகரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஹவுஸ் காஸ் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9-ம் தேதி டெல்லி கவுதம் நகரில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கையின் போது, அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன (எய்ம்ஸ்) பாதுகாவலர்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சோம்நாத் வியாழன் காலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்புகாரில், ‘சுமார் 300 ஆதரவாளர்களுடன் கவுதம் நகரில் திரண்ட எம்எல்ஏ சோம்நாத், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சுற்றுச் சுவர், பொது இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி அதை இடிக்க முயன்றார்.
எய்ம்ஸ் பாதுகாவலர்கள் தடுக்க முற்பட்டபோது, சோம்நாத் அவர்களை தாக்கினார். ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசியதோடு, அங்கிருந்த நோயளிகளுக்கும் தொந்தரவு ஏற்படுத்தினார்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை மறுத்த சோம்நாத், ‘பொதுப்பணித் துறை சார்பில் திட்டமிடப்பட்ட, ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவவே அங்கு சென்றேன். அங்கு பிரச்சினை எதுவும் நடக்கவில்லை’ எனக் கூறினார்.