

காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி டெல்லியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று, ஷாதரா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, வழக்கம் போல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர், "காங்கிரஸ் கட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கையை டெல்லி மக்கள் இழந்து விட்டனர். போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது. அதனால் தான் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
மேலும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேச வழியில்லாததால் தான் காங்கிரஸ் என்னை விமர்சிப்பதை மட்டும் செய்கிறது. என்னை விமர்சித்தால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என தவறாக புரிந்து கொண்டுள்ளது காங்கிரஸ். தவிர மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை" என்றார்.