

பெங்களூருவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வு மாணவர் கன்னைய்ய குமார், புதிய அரசியல் தலைவர்கள் உருவாவதை அரசியல்வாதிகள் விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
“நான் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன், புதிய கட்சியும் தொடங்க மாட்டேன். நான் ஒரு ஆய்வாளர், எனவே ஆசிரியர் பணிதான் எனக்கு சிறந்தது. ஆனால் அரசியல், சமூக இயக்கத்திற்கான தொடர்பை கட்டமைப்பதில் கடினமான முனைப்பு காட்டுவேன். இதற்கு கல்வி நிலையங்களில் வலுவான, அதிர்வூட்டும் மாணவர் கூட்டமைப்பு தேவை.
பல மாநிலங்களில் மாணவர் சங்க தேர்தல் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடாகாவும் இதில் ஒன்று. பிஹார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் மாணவர் சங்கங்களிலிருந்தவர்கள் முதல்வராக உயர்வு பெற்ற போதும் இம்மாநிலங்களிலும் மாணவர் சங்க தேர்தல் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் ஏற்கெனவே இருக்கும் அமைப்பை கேள்விக்குட்படுத்தும் புதிய தலைவர்கள் எழுச்சியுறுவதை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.
நாட்டில் மூச்சுக்குழலை நெறிக்கும் ஒரு சூழல் நிலவுகிறது, உண்மையில் பேச்சு, கருத்துச் சுதந்திரம் கடுமையாக அடக்கி ஒடுக்கப்படுகிறது. கருத்துகளை கூறுவதற்காக மாணவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். ஜே.என்.யூ. மாணவர் நஜீப் அகமது, இவர் முதலாம் ஆண்டு பயோ-டெக் மாணவர், இவர் காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடைசியாக நஜீபுடன் சண்டையிட்ட அகில் பாரதிய வித்யார்த்தி பவன் மாணவர்கள் 3 பேர் மீது எந்த ஒரு நடவடிக்கையும், விசாரணையும் இல்லை.
இது கல்வி நிலையங்கள் தங்களது தன்னாட்சி அதிகாரத்தில் எந்த அளவுக்கு சமரசம் செய்து கொண்டுள்ளன என்பதையே இந்த நிலவரங்கள் காட்டுகின்றன.
எனவே நானும் மற்ற மாணவர் சங்கத் தலைவர்களும் கல்வி நிலையங்களில் மாணவர் சங்க தேர்தல் தேவை என்று கருதுகிறோம், உச்ச நீதிமன்றம் நியமித்த லிங்தோ கமிட்டியும் இதையே பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் சமூகத்திற்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. சமூக இயக்கங்களில் எழுப்பப்படும் விவகாரங்கள் அரசியல் தளத்தில் கேள்விகளாக உருப்பெறுவதில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் சமூகத்துடன் தொடர்பை இழந்து விட்டன.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா பெண்களைப் பற்றி அவ்வாறு கருத்துக் கூறியது வருத்தத்திற்குரியது, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவர்கள் பற்றி பேசாமல் பெண்களைப் பற்றி அவர் பேசுவது மோசமானது.
இங்குள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மத்தியில் ஆளும் கட்சிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. இருவருமே மாணவர்களை தேச விரோத வழக்கில் சிக்க வைக்கின்றனர்” என்றார் கன்னய்ய குமார்.