Published : 05 Nov 2013 10:06 AM
Last Updated : 05 Nov 2013 10:06 AM

மோடியை வாரிசாக ஏற்றிருக்க மாட்டார் படேல்: சொல்கிறார் மகாத்மா காந்தியின் பேரன்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தனது கொள்கை ரீதியான வாரிசாக நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார் என்று மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் கூறியுள்ளார்.



சமீப காலமாக படேலை சொந்தம் கொண்டாடி புகழ்வதில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ்மோகன் காந்தி, சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தை தடுக்க மோடி அரசு தவறிவிட்டது குறித்தும், துயரச் சம்பவத்தை கண்டும் மிகவும் வருந்தியிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங்கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல்பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையை கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட்டமைப்பதில் வல்லவர். மற்றவர்களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதே போன்று மோடியும் செயல்பட்டால், அது பாராட்டுக்குரியதே" என்றார்.

அதே சமயம், கடந்த 63 ஆண்டுகளாக படேலை காங்கிரஸ் மறந்துவிட்டது. அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாட்டின் முதல் பிரதமரான நேருவுக்குப் பின், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்தனர். அதே சமயம், படேலின் வாரிசுகள் கட்சியிலோ ஆட்சியிலோ பங்கேற்கவில்லை. நேருவை விட படேல் 14 ஆண்டுகள் மூத்தவர். அவரது உடல் நிலையும் சீராக இல்லை. அதனால்தான், படேலுக்கு பதிலாக நேருவை பிரதமராக்கினார் மகாத்மா காந்தி. அவரின் இந்த முடிவை பின்னர் படேல் ஏற்றுக் கொண்டார். அதுதான் சரியானது என்றும் தெரிவித்தார்.

ஒரு காங்கிரஸ்காரனாக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார். 1947ம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பணிகளை பாராட்டி வந்த படேல், காந்தி படுகொலைக்குப் பின் இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்" என்றார் ராஜ்மோகன் காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x