

5 மாநில தேர்தலுக்குப் பிறகு பொது பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பட்ஜெட் மூலம் வாக்காளர்களை மத்திய அரசு கவர முயற்சிக்கலாம். இது தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை பாதிக்கும். எனவே வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு பதிலாக 5 மாநில தேர்தல் நடைமுறைகள் மார்ச் 8-ம் தேதி முடிந்த பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும்.
பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடிக்கின்றனவா என்பதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உ.பி..யில் அரசு இயந்திரம் மற்றும் காவல்துறையை அரசியல் நோக்கங்களுக்காக முதல்வர் அகிலேஷ் பயன்படுத்தி வருகிறார். இதை தடுப்பதற்கு மத்தியப் படைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். மேலும் மாநில காவல்துறை செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
உ.பி., உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்