

நாகாலாந்து முதல்வர் ஜெலியாங்கை பதவியில் இருந்து நீக்கக் கோரி, தமிழகத்தை போலவே அம்மாநில எம்எல்ஏக்கள் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க நாகாலாந்து அரசு முடிவு செய்தது. இதற்கு பழங்குடியின அமைப்பினரும், எம்எல்ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். .
இந்நிலையில் இடஒதுக்கீடு விவகாரத்தை சரியாக கையாளாத முதல்வர் டி.ஆர்.ஜெலியாங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் நிபியூ ரியோவை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் மாநிலத்தை விட்டு வெளியேறி, அசாமின் கசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரியோ அந்த சொகுசு விடுதிக்கு சென்று எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் சுரோஜெலி லைஜெய்ட்சூ கூறும்போது, ‘‘கட்சியின் முடிவுக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள். விரைவில் மாநிலத்துக்கு திரும்பி தொகுதி பணியிலும் ஈடுபடுவார்கள்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக கடந்த புதன் கிழமை அன்று 49 எம்எல்ஏக்களில் 42 பேர் லைஜெய்ட்சூவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் திடீரென 20 எம்எல்ஏக்கள் இம்முடிவில் இருந்து பின் வாங்கியதால், ரியோவை முதல் வராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே முதல்வர் ஜெலியாங் பதவி விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. நாகாலாந்து சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 60 எம்எல்ஏக்களில், ஆளும் கட்சிக்கு 48 எம்எல்ஏக்கள் உள்ளனர்.