

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை அன்று கஜகஸ்தானில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைச் சந்தித்துப் பேசினார். அஸ்தானாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு முன்பாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முன்னதாக இருநாட்டு பிரதமர்களும் சீனா, ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அளித்த வரவேற்பு விருந்தில் கலந்துகொண்டனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் முழு நேர உறுப்பினர்களாகச் சேரவுள்ளன. இதற்காக மோடி கஜகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவுக்குச் சென்றுள்ளார்.
விழாவில் இருநாட்டுப் பிரதமர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகவும், ஆனால் இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அங்குள்ள அதிகாரி கூறும்போது, ''ஷெரீப்புக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இப்போதுதான் இரண்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மோடி, ஷெரீப்பின் உடல் நலன் குறித்து விசாரித்தார். அத்துடன் அவரின் தாய் மற்றும் குடும்பம் குறித்தும் கேட்டறிந்தார்'' என்றார்.