Last Updated : 19 Jan, 2016 02:21 PM

 

Published : 19 Jan 2016 02:21 PM
Last Updated : 19 Jan 2016 02:21 PM

தலித் ஆய்வு மாணவர் தற்கொலை: இரானி, தத்தாத்ரேயாவை நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஹைதராபாத்தில் தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அகியோரை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குமாரி செல்ஜா கூறும்போது, “ஸ்மிருதி இரானியும் தத்தாத்ரேயாவும் ஒன்று ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையேல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நீக்க வேண்டும். குறிப்பாக தத்தாத்ரேயா அகில பாரத விஸ்வ பரிஷத்தை முன்னேற்றும் அவர் தலித் மாணவர்களுக்கு எதிரானவர்.

இந்த விவகாரத்தில் நாம் கண்ணால் காண்பதைவிடவும் அதிக கொடுமைகள் உள்ளன. பிரதமர் இப்போதாவது பேசி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

பிரதமர் தன் மவுனத்தை கலைக்க வேண்டும். தலித்துகளுக்கு எதிராக பாஜக அமைச்சர்கள் செயல்படுவது இது முதல்முறையல்ல. தலித்துகள் பற்றி நிறைய பாஜகவினர் தரக்குறைவாக பேசியுள்ளனர், ஆனால் பாஜக மேலிடம், பிரதமர் உட்பட இதனைக் கண்டு கொள்ளாமல் உள்ளது” என்று கடுமையாக சாடினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் அமைச்சர் தத்தாத்ரேயா ஆகியோர் பெயர்கள் புகாரில் சேர்க்கப்பட்டுள்ளன.தலித் மாணவர்கள் தேச-விரோத செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர் இரானிக்கு கடிதம் எழுதியதும் பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் செல்ஜா மேலும் கூறும்போது, “நலிவுற்றவர்களின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த தலித் மாணவரின் தற்கொலை என்ற பயங்கரமும்.

ரோஹித் வெமுலாவின் தற்கொலை தனிப்பட்ட சம்பவம் அல்ல. பல்கலைக் கழக வளாகத்தில் தலித் மாணவர்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் மற்றும் ஏபிவிபி தொண்டர்கள் தொடர்ந்த் தலித் மாணவர்களை கேவலப்படுத்துவது ஆகியவற்றின் விளைவே இந்தத் தற்கொலை.

தலித் மாணவர்களை கேவலப்படுத்துவது என்பது பல்கலைக் மேலிடத்தின் ஆதரவுடன் நடைபெறுகிறது. 5 தலித் ஆய்வு மாணவர்கள் கடந்த ஆகஸ்டில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் மீதான புகார்கள் பற்றிய விசாரணையில் ரோஹித் மற்றும் சகாக்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றமற்றவர்கள் என்று தெரிந்த பின்பும் இவர்கள் தத்தாத்ரேயினால் கேவலப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்தே அவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தலித் மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்த 18 டிசம்பர், 2015 கடிதமும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது. இதைவிடவும் அதிர்ச்சிகரமாக மனிதவள மேம்பாடு அமைச்சகம் இந்த 5 தலித் ஆய்வு மாணவர்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி 4 கடிதம் எழுதியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

தலித்துகளின், ஏழைகளின் உரிமைகளை பறிப்பது மோடி அரசுக்கு வாடிக்கையாகி வருகிறது. மோஹன் பகவத் இட ஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியதும், கொல்லப்பட்ட தலித் குழந்தைகளை வெட்கங்கெட்டத் தனமாக நாய்களுடன் ஒப்பிட்ட வி.கே.சிங்கின் கருத்தும் பாஜக-வின் தலித் விரோத வேராழத்தைக் காட்டுகிறது.

மேலும் பாஜகவின் தலித் விரோத மனோநிலை, தாழ்த்தப்பட்டவர்களுக்கான நலத்திட்டங்களை குறைத்ததிலும் தெரிய வருகிறது. 2015-16 பட்ஜெட்டில் மட்டும் சுமார் ரூ.19,734 கோடி நலத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

எஸ்.சி/எஸ்.டி-களுக்கான போஸ்ட்-மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திலும் ரூ.300 கோடிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது” என்றார் செல்ஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x