Published : 02 Oct 2014 11:38 AM
Last Updated : 02 Oct 2014 11:38 AM

தூய்மை இந்தியா: தொடங்கி வைத்து துடைப்பத்தால் சுத்தம் செய்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான தூய்மை இந்தியா பிரச்சாரத்தை இன்று காலை அவர் தொடங்கி வைத்தார். துடைப்பத்தைக் கையில் எடுத்து அவரே வீதியைச் சுத்தம் செய்யவும் செய்தார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கான தனது செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமரின் இந்த தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

5 ஆண்டுகளுக்கான தூய்மை இந்தியா திட்டம் 2019ஆம் ஆண்டு இதே அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தில் நிறைவடைகிறது.

தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரது கல்லறைகளுக்கு சென்று மலரஞ்சலி செலுத்திய பிறகு வால்மீகி பாஸ்தி சென்ற பிரதமர் மோடி அங்கு துடைப்பத்தை எடுத்து தானே வீதியைச் சுத்தம் செய்தார். இந்தக் காலனியில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுத்தம் செய்வது தூய்மைப் பணியாளர்களின் கடமை மட்டுமா? - மோடி பேச்சு

பிறகு தூய்மை இந்தியா-வை துவக்கி வைத்து அவர் கூறும்போது, ”மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று நான் அவருக்குத் தலை வணங்குகிறேன்.

காந்தியின் வாழ்க்கையும் சிந்தனையும் நம்மிடையே பெரும் தூண்டுதலையும் எழுச்சியுணர்வையும் ஏற்படுத்துவது, ஆகவே காந்தி கண்ட கனவை இந்தியர்களாக நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.

தூய்மை இந்தியா என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேசப்பற்றினால் இது தூண்டப்பட்டுள்ளதே தவிர அரசியலினால் அல்ல. அனைத்து அரசுகளும் தேசம் தூய்மையாக இருக்க நிறையச் செய்துள்ளனர் அவர்களை இத்தருணத்தில் வாழ்த்துகிறேன். இந்த அரசுதான் இவ்வாறெல்லாம் செய்கிறது என்று நான் ஒருபோதும் உரிமை கோர மாட்டேன்.

மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா என்ற கனவு மட்டும் இன்னமும் நிறைவேறவில்லை. சுத்தம் செய்வது தூய்மைப் பணியாளர்களின் பணி மட்டும்தானா? பழைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது கடினம், ஆனால் 2019வரை நமக்கு கால அவகாசம் இருக்கிறது. மாறுவோம், மாற்றுவோம்.

நாம் செவ்வாய் கிரகத்திற்கு அடியெடுத்து வைத்தோம், பிரதமரோ, அமைச்சரோ யாரும் செல்லவில்லை. மக்கள்தான் இதனை சாத்தியப் படுத்தினர். நமது விஞ்ஞானிகள் செய்தனர். ஆகவே தூய்மை இந்தியாவை நாம் படைத்திடமுடியும். எங்காவது குப்பையைப் பார்த்தால் அதனை அகற்றுங்கள் அதனைப் படம் பிடித்தோ, வீடியோ எடுத்தோ சமூக வலைத்தளங்களில் வெளியிடுங்கள்.

தூய்மைக் கேட்டினால் நாட்டிற்கு ஆண்டுக்கு ரூ.6,500 கோடி இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது” என்று மோடி தனது உரையை முடித்தார்.

நாடு முழுதும் சுமார் 31 லட்சம் அரசு ஊழியர்கள் பல்வேறு பொது நிகழ்ச்சியில் ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்திற்காக, செயல்பாட்டிற்காக உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த பிரச்சாரத்திற்காக பள்ளிக் குழந்தைகள் இன்று ராஜ்பாத் முழுதும் மூவர்ணக் கொடி பலூன்களுடன் அணிவகுத்தனர்.

அர்ஜுனா விருது குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x