Last Updated : 16 Oct, 2014 12:58 PM

 

Published : 16 Oct 2014 12:58 PM
Last Updated : 16 Oct 2014 12:58 PM

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி26: 20-வது நிமிடத்தில் செயற்கைக் கோள் நிலைநிறுத்தம்

தரை, வான் மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ‘ஐஆர்என்எஸ் எஸ்-1சி’ செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி-சி26 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று அதிகாலை 1.32 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 20-வது நிமிடத்தில் செயற்கைக் கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இந்தியா தனது உள்நாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்காக பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திவருகிறது. இதற்காக, ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை பயன்படுத்திவருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையிலேயே ‘மங்கள்யான்’ விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி, உலக சாதனை படைத்தது இந்திய அரசு.

இந்நிலையில், கடல் ஆராய்ச்சிக் காக ‘ஐஆர்என்எஸ்எஸ்’ ரக வரிசையில் 7 செயற்கைக் கோள் களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, 1பி ஆகிய 2 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி-சி22 மற்றும் சி24 ராக்கெட்கள் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மற்றும் கடந்த ஏப்ரலில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, ஐஆர்என் எஸ்எஸ்-1சி செயற்கைக் கோளை கடந்த 10-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. செயற்கைக் கோளின் தொலைதொடர்புக் கருவியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் பணி ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், அந்த கோளாறு சரிசெய் யப்பட்டது.

இதையடுத்து, 16-ம் தேதி (நேற்று) அதிகாலை விண்ணில் செலுத்த முடிவானது. இதற்கான 67 மணி நேர ‘கவுன்ட் டவுண்’ கடந்த 13-ம் தேதி காலை 6.32 மணிக்குத் தொடங்கியது . ராக்கெட்டின் 4 நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின்களில் திரவ எரிபொருள் நிரப்பும் பணி சீராக நடந்தது. ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் நேற்று முன்தினம் காலை திடீரென பலத்த இடியுடன் மழை பெய்தது. இதனால், எரிபொருள் நிரப்பும் பணி சற்று தாமதமானது.

இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக் கோள் திட்டமிட்டபடி நேற்று அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி-சி26 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி இருளைக் கிழித்துக்கொண்டு விண்ணில் பாய்ந்தது.

புறப்பட்ட 20-வது நிமிடத்தில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டது. கட்டுப் பாட்டு அறையில் இருந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச் சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக் கோள் 1,425.4 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 282.5 கி.மீ., அதிகபட்சம் 20,670 கி.மீ. தொலைவு கொண்ட வட்டப் பாதையில் செயற்கைக் கோள் சுற்றிவருகிறது.

பிஎஸ்எல்வி-சி26 எக்ஸெல் வகை ராக்கெட் என்பதால், அதன் பக்கவாட்டில் மொத்தம் 6 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஐஆர்என் எஸ்எஸ்-1சி செயற்கைக்கோளில் லேசர் அலைக்கற்றை மூலம் தொலைவை துல்லியமாகக் கணக்கிட உதவும் கார்னர் கியூப் ரெட்ரோ ரிப்ளக்டர் கருவி, சி-பேண்ட் டிரான்ஸ்பாண்டர், ருபீடியம் அணு கடிகாரம் உள்ளிட்ட கருவிகள் உள்ளன.

கடல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண் காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பயன் படுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். செயற்கைக் கோளில் உள்ள சோலார் பேனல்கள் உதவியுடன் அது இயங்கும். அதன் செயல்பாடு, பெங்களூரில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு, இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானி களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x