

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பணம் எடுத்துச் சென்ற வங்கி வேன் ஒன்றை மறித்த தீவிரவாதிகள், 4 போலீஸார் மற்றும் 2 வங்கி அதிகாரிகள் உட்பட 6 பேரை சுட்டுக் கொலை செய்து விட்டு பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இவர்களை வேனிலிருந்து வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றதாக தெற்கு காஷ்மீர் டிஐஜி எஸ்.பி.பனி தெரிவித்தார்.
குல்காம் மாவட்டத்தில் இன்று வங்கி பணத்தை வேனுடன் பயங்கரவாதிகள் கொள்ளையடித்து உள்ளனர். பணத்தை பயங்கரவாதிகள் கொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற 4 போலீசார் மற்றும் இரு வங்கி அதிகாரிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறித்து சென்றார்கள். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ரொக்கம் கொண்டு சென்ற வேன் ஷோபியன் மற்றும் குல்காமுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது கீகாம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்கானதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் “இருதரப்பினரிடையேயும் துப்பாக்கிச் சண்டை நடந்தது, விவரங்கல் சேகரிக்கப்பட்டு வருகின்றன” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பழைய நோட்டுகள் செல்லாது போன நிலையில் அந்த நடவடிக்கைக்குப் பிறகே தீவிரவாதிகள் வங்கிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி கொலை, கொள்ளைகளை கடந்த ஆண்டு இறுதியிலிருந்து நடத்தி வருகின்றனர்.