

மத்தியப்பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டம், மண்டலானா என்ற கிராமத்தில், சவீதா என்ற தலித் பெண் தனது கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால், தனது 2 குழந்தைகளுடன் இரு ஆண்டுகளுக்கு முன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மேலும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பராமரிப்புத் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
நிதிமன்ற விசாரணையில், வீட்டில் கழிப்பறை கட்டுவதாக அப்பெண்ணின் கணவர் ஒப்புக்கொண்டு அவ்வாறே செய்துமுடித்தார்.
இந்நிலையில் சவீதா கடந்த சில நாள்களுக்கு முன் தனது கணவன் வீட்டுக்குத் திரும்பினார். இதற்கிடையே இந்த வழக்கு குறித்து தெரியவந்த சுலப் இன்டர்நேஷனல் தன்னார்வ அமைப்பு, அக்குடும்பத்துக்கு தனது சார்பில் மேலும் ஒரு கழிப்பறை கட்டித்தந்தது.
இந்நிலையில் அப்பெண்ணை கௌரவிக்கும் வகையில் ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக இந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிந்தேஷ்வர் பதக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.