

ஆந்திர சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபை தொடங்கியது. சில நிமிடங்களிலேயே, தனித் தெலங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை தொடங்கியவுடன், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சுயினர் ஆந்திரம் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்கள் எழுப்பினர்.
மேலும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு தெலங்கானா விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் இதனை ஏற்க ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
மேலும், ஆந்திரா, ராயல்சீமா எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோசங்கள் எழுப்பினர். தொடர் அமளியை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஆந்திர மாநில சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று தொடங்கியது. அவை தொடங்கிய நாள் முதல் அவையில், உறுப்பினர்கள் தெலங்கானா விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் அளித்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைவு சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியது.
இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். குடியரசுத் தலைவரின் பரிந்துரையின்படி ஆந்திர சட்டமன்றத்தில் மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு ஏதுவாக மசோதா பலத்த பாதுகாப்புடன் ஆந்திர சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதா மீது எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமலேயே அவை ஜன.3-க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 3.ல் மீண்டும் கூடும் சட்டமன்றம் ஜனவரி 10 வரையிலும், பின்னர் ஜனவரி 16 முதல் 23 வரையிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.