காவிரி போராட்டத்தால் 20 நாட்களுக்கும் மேலாக முடங்கிய மண்டியாவில் இயல்புநிலை திரும்புகிறது

காவிரி போராட்டத்தால் 20 நாட்களுக்கும் மேலாக முடங்கிய மண்டியாவில் இயல்புநிலை திரும்புகிறது
Updated on
1 min read

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாட காவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த போராட் டங்கள் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பெங்களூரு, மண்டியா, மைசூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களில் பெரும் வன்முறை வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், லாரி, வேன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

வன்முறை நீடித்ததால் பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் 25-ம் தேதி (இன்று) வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி மீண்டும் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மீண்டும் பதற்றம் உருவானது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட முடியாது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக காவிரி நதி பாதுகாப்பு குழு தலைவர் மாதே கவுடா அறிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு தலா ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மண்டியா மாவட்ட விவசாயி களின் போராட்டம் வாபஸ் பெறப் பட்டதை தொடர்ந்து பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களும் திரும்ப பெறப்பட்டன. இதனால் மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்புகிறது. போராட்டத்தால் அடைக்கப்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் 20 நாட்களுக்கு பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

தமிழகம், கர்நாடகா இடையே நிறுத்தப்பட்ட பேருந்து, லாரி போக்குவரத்தும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in