

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி வாக்களித்த 2 எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்வால் நேற்று கூறியதாவது:
சட்டப்பேரவையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் கடந்த மே 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பாஜக உறுப்பினர் பிம்லால் ஆர்யாவும் காங்கிரஸ் உறுப்பினர் ரேகா ஆர்யாவும், தங்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வேறு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கட்சி மாறி வாக்களித்ததற்கு போதுமான ஆதாரம் இருப்பதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 2 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஹரிஷ் ராவத் (காங்கிரஸ்) தலைமையிலான அரசுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் கடந்த மார்ச் மாதம் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, மார்ச் 27-ம் தேதி அந்த 9 பேரையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் 71 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 60 ஆகக் குறைந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பாஜக உறுப்பினர் காங் கிரஸ் அரசுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் உறுப்பினர் எதிராக வும் (பாஜகவுக்கு ஆதரவாக) வாக்களித்தனர். எனினும், வாக் கெடுப்பில் ராவத் அரசு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இவ்விரு கட்சி களும் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த உறுப்பினர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கோரிக் கை வைத்திருந்தன.