

ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்த விவாதத்திலிருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சிகள் காரணங்களை கண்டுபிடித்துக் கொள்கின்றன என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் கறுப்புப் பணம் பெருகியதே மன்மோகன் சிங் ஆட்சியில்தான் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மன்மோகன் சிங் எதிர்ப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் அருண் ஜேட்லி.
மேலும் மன்மோகன் சிங்கின் கடுமையான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஜேட்லி, “அவர் இந்த நடவடிக்கையில் மகிழ்ச்சியடைய வாய்ப்பில்லை, காரணம் அவரது ஆட்சியில்தான் அதிகப்படியான கறுப்புப் பணம் பெருகியது” என்றார்.
மேலும் மன்மோகன் சிங் கூறுவது போல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2% குறையும் என்பதை ஏற்பதற்கில்லை என்று கூறிய ஜேட்லி, நிழல் பொருளாதாரத்தின் பணம் மைய நீரோட்டத்திற்கு வரும் போது ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் சாதகமான விளைவுகளே ஏற்படும் என்றார்.
“தங்களது ஆட்சியில் பெரிய அளவில் கறுப்புப் பணம் பெருக்கப்பட்டதையும் ஊழல்களையும் கண்டு கொள்ளாதவர்கள் தற்போது கறுப்புப் பணத்திற்கு எதிரான போரை தவறு என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
முதல் நாளிலிருந்தே அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, நாங்கள் விவாதத்திற்குத் தயார். எதிர்க்கட்சியினர்தான் விவாதத்தை முடக்க ஆர்பாட்ட வழியை கடைபிடித்து வருகின்றனர். இன்று காலை பிரதமர் விவாதத்தில் பங்கேற்பார் என்று நாங்கள் கூறியவுடன் அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஆனால் தற்போது விவாதத்தை முடக்க காரணங்களை கண்டுபிடிக்கின்றனர். அதிக அளவிலான கறுப்புப் பணம் 2004-14 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கீழ்தான் பெருகியது. இந்தக் காலக்கட்டத்தில்தான் 2ஜி, நிலக்கரி ஊழல்களும் நடந்தன.
கறுப்புப் பணத்திற்கு எதிரான எங்கள் நடவடிக்கையை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை” என்றார் அருண் ஜேட்லி.