

மியான்மர் தலைநகர் நைப்பியிதாவில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
இலங்கையில் 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாகவும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்மையில் ஆய்வு நடத்திய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.விடம் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்தின் மீது இந்த மாத இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்குமா, எதிர்க்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
எதிர்ப்பை மீறி சந்திப்பு
தற்போது மியான்மர் தலைநகர் நைப்பியிதாவில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மன்மோகன் சந்தித்துப் பேசி வருகிறார்.
ஆனால் ராஜபக்சேவை சந்திக்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இருப்பினும் இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் 25 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.