

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட வேண்டுமென மத்திய அரசிடம் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: கருப்புப் பணம் வைத்திருப்போர் விஷயத்தில் நாட்டு மக்களிடம் பாஜக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
கறுப்புப் பண விவகாரத்தில் யாரை காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் பாஜக அமைச்சர்கள் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை.
கருப்புப் பணம் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய குற்றம். கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்களை அம்பலப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த பாஜக இப்போது அதனை மீறிவிட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.