சமாஜ்வாதியில் மோதல் தொடர்கிறது: சைக்கிள் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு?

சமாஜ்வாதியில் மோதல் தொடர்கிறது: சைக்கிள் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு?
Updated on
1 min read

சமாஜ்வாதி கட்சியில் தந்தை முலாயம் சிங், மகன் அகிலேஷ் யாதவுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வராததால் கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் சமாஜ்வாதி கட்சியில் வேட்பாளர் தேர்வில் மோதல் வெடித்து கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் ஓரணியாகவும் அவரது மகனும் உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர்.

இருதரப்பினரும் கட்சியின் சைக்கிள் சின்னத்தை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இருதரப்பினரும் பெரும்பான்மையை நிரூபிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 229 சமாஜ்வாதி எம்எல்ஏக்களில் 200 பேரின் கையெழுத்து மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கையெழுத்தை பெற்று தேர்தல் ஆணையத்திடம் அகிலேஷ் தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து அகிலேஷின் ஆதரவாளர் ராம்கோபால் யாதவ் கூறியபோது, சுமார் 1.5 லட்சம் பக்கங்கள் கொண்ட மனு, இதர ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதேபோல முலாயம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் திங்களன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இருபிரிவினரின் கோரிக்கை குறித்து வரும் 17-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை அந்த தேதிக்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால் சைக்கிள் சின்னம் முடக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே முலாயம் சிங் லக்னோவில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது, கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.

முலாயமின் தீவிர ஆதரவாளரான அமர்சிங் கூறியபோது, அகிலேஷ் தரப்பினர் போலி கையெழுத்துகள் மூலம் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in