

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம், கென்ட் நகரில் சீக்கியர் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அப்போது, ‘உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்’ என்று அந்த மர்ம நபர் மிரட்டினார்.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம், ஒலாத்தேவில் இந்திய பொறியாளர் நிவாஸை கடற் படை முன்னாள் வீரர் ஆடம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி தெற்கு கரோலினா மாகாணம், லங்காஸ்டர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஹர்னிஷ் படேலை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் ஒரு இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன் மாகாணம், கென்ட் நகரைச் சேர்ந்தவர் தீப் ராய் (39). இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டில் காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த வெள்ளையின இளைஞர் ஒருவர், தீப் ராயுடன் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது.
அப்போது அந்த இளைஞர் துப்பாக்கியால் தீப் ராயை சுட்டார். ‘அமெரிக்காவில் இருக்கக்கூடாது, உங்கள் நாட்டுக்கு திரும்பி ஓடி விடு’ என்று கத்தினார். படுகாய மடைந்த தீப் ராய் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார்.
அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், 6 அடி உயர முள்ள வெள்ளையின இளைஞர் என்னை துப்பாக்கியால் சுட்டார். அவர் யாரென்று தெரியாது என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து எப்பிஐ போலீஸார் விசா ரணை நடத்த கென்ட் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.
சுஷ்மா கண்டனம்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் வாழும் தீப் ராய் சுடப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது தந்தை யுடன் தொலைபேசியில் பேசினேன். தீப் ராயின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்தார். தீப் ராய் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
தெற்கு கரோலினா மாகாணத் தில் இந்திய தொழிலதிபர் ஹர்னிஷ் படேல் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்தை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பல்வேறு சீக்கிய அமைப்பு கள், தீப் ராய் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதை வன்மை யாகக் கண்டித்துள்ளன.