

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நீதிபதிகள் நியமன நடவடிக்கைகளில் நீதித் துறை தவிர நிர்வாகத் துறையின் பங்கேற்பும் உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் நடைமுறையே தற்போது இந்தியாவில் உள்ளது.
இதற்காக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் நீதிமன்ற கொலிஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் உள்ளன. அந்த கொலிஜியத்தில் தலைமை நீதிபதி தவிர மூத்த நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.
கொலிஜியம் முறையில் வெளிப்படைத் தன்மை அறவே இல்லை என்ற விமர்சனம் நாளுக்கு நாள் வலுவடைந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக ஓர் ஆணையத்தை அமைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.