

உத்தராகண்ட் மாநில தேசிய நெடுஞ்சாலையில் கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பத்ரிநாத் கோயிலுக்கு புனித யாத்திரை செல்லும் 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப் பகுதியில் சிக்கி தவிக்கின்றனர். மீட்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் மிக பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில், 6 மாத குளிர்கால இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன்மூலம் ‘சார்தாம்’ என்றழைக்கப்படும் 4 கோயில்களுக்கு (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஹதிபஹார் பகுதி தேசிய நெடுஞ் சாலையில் நேற்றுமுன்தினம் இரவு கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் ரிஷிகேஷ் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் ஏராளமான வாகனங்கள் சிக்கின. புனித யாத்திரை மேற்கொண்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அருகில் உள்ள கோவிந்த்கட் குருத்வாராவில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில் மீட்புப் படை யினர் சாலையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள் ளனர். பத்ரிநாத் கோயில் வந்தடைந்த பக்தர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு திரும்பி செல்ல பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை நேரிடையாக கண்காணித்து விரைவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர்செய்ய, பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமித் நெகிக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
விஷ்ணுபிரயாக், பாண்டுகேஸ் வர், கோவிந்த்கட் போன்ற பகுதி களில் சிக்கியுள்ள ஆயிரக்கணக் கான பக்தர்களுக்கு தேவை யான அத்தியாவசியப் பொருட் களை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நிலச்சரிவால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கியுள்ள தாக ஊடகங்களில் வந்த செய்தியை சமோலி மாவட்ட ஆட்சியர ஆசிஷ் ஜோஷி மறுத்துள் ளார். 2000 பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு பகுதி சரிசெய்யப்பட்டு 800 பக்தர்கள் தங்கள் யாத்திரையை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர் என்று ஜோஷி தெரிவித்தார்.