Published : 04 Oct 2014 10:01 AM
Last Updated : 04 Oct 2014 10:01 AM

உலக மசாலா: அதிகரித்துள்ள ஜப்பானியர்களின் ஆயுள்

போலந்தில் கால்நடை மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு மாணவர் ஒருவர், நாய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார். திடீரென்று தன் காதலியைக் கவர்வதற்கு ஒரு யோசனை தோன்றியது. நாய்க்குத் தையல் போட்ட பிறகு, நூலால் நாயின் வயிற்றில் ஐ லவ் யூ என்று தைத்தார். இதைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். உடனே நண்பர்கள் பலரும் இவரின் செயலுக்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். கல்லூரியிலும் ‘காதலுக்கு நாங்கள் எதிரிகளல்ல; ஆனால் அதை வெளிப்படுத்துவதில் ஒரு நேர்மை இருக்க வேண்டாமா?’ என்று கேட்கவும், உடனே ஃபேஸ்புக்கில் இருந்து புகைப்படத்தை எடுத்துவிட்டார்.

ஏம்ப்பா, உன்னோட காதலைச் சொல்ல வேற வழியா இல்லை… கன்ஸ்யூமர் கோர்ட்ல நாய் கேஸ் போடாதுன்னு தைரியமா?

ஜப்பானியர்களின் ஆயுள் காலம் அதிகரித்திருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் மேல் 65 வயதைக் கடந்தவர்கள். இந்த முதியவர்களுக்காகப் பல விஷயங்கள் அங்கே அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வயதானவர்களுடன் உரையாட ரோபோ பொம்மைகள் இருக்கின்றன. தனியாக இருக்கும் முதியவருக்குத் தனிமை தெரியாதவண்ணம் இருக்க, புதிதாக ஒரு நாற்காலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தலையில் தொப்பியுடன் காட்சியளிக்கும் ஒரு பொம்மை, நாற்காலியில் இணைக்கப்பட்டிருக்கிறது. நாற்காலியில் அமர்ந்தால், பொம்மையின் மடியில் அமர்வது போல இருக்கும். பொம்மையின் நீண்ட கைகளை எடுத்து நம்மைச் சுற்றி வைத்துக்கொண்டால், மனிதரின் அரவணைப்பில் இருப்பது போலவே தோன்றும். தனிமை தெரியாது!

இந்த ஜப்பானியர்கள் என்ன மாதிரி யோசிக்கிறாங்க பாருங்க!

போஸ்னியாவில் 77 வயதான ஹவா செபிக் மிகவும் பிரபலமானவர். கண்களில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் அவருடைய நாக்கின் மூலம் ஒரு முறை தடவி சுத்தம் செய்தால், நோய் குணமாவதாக எல்லோரும் சொல்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாக இந்த விநோத கண் மருத்துவத்தைச் செய்து வருகிறார் ஹவா செபிக். குழந்தையாக இருந்தபோது, தன்னுடைய சகோதரனுக்குக் கண்களில் பிரச்னை ஏற்பட்டபோது, யதேச்சையாக நாக்கால் தடவினார். உடனே சகோதரனின் கண் பிரச்னை தீர்ந்தது. அன்று முதல் அவரைத் தேடி ஏராளமானவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மருந்து இல்லை, மாத்திரை இல்லை… நாக்கின் மூலம் ஒரே தடவலில் குணமாகிவிடுவதாக நம்புகிறார்கள். மருத்துவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் ஹவா செபிக்கைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

ம்ம்… இது போன்ற நம்பிக்கைகளுக்கு உலகம் முழுவதும் பஞ்சமில்லை போல…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது லியான்னேக்கு ஒரு விநோதமான விருப்பம். குதிரைகளை அதிகமாக நேசிக்கக்கூடியவருக்கு, அந்தக் குதிரையைப் போலவே தன்னையும் மாற்றிக்கொள்ள ஆசை வந்துவிட்டது. குதிரைக்குப் போடும் கடிவாளம், கால்களில் அடிக்கப்படும் லாடம் போன்றவற்றைத் தானும் அணிந்துகொள்கிறார். ஒரு குதிரையைப் போலவே செயல்படுகிறார். குதிரையாக இருக்கும்போது தன்னுடைய பெயரை ஷியான் என்று மாற்றிக்கொள்கிறார். ‘ஒரு குதிரையைப் போல இருக்கும்போது நான் மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன்’ என்று தன்னுடைய செயலுக்கு விளக்கம் அளிக்கிறார் லியான்!

உங்களை நினைச்சு சிரிக்கிறதா, அழறதான்னு தெரியலை லியான்… இல்லை ஷியான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x