Published : 25 Sep 2013 04:11 PM
Last Updated : 25 Sep 2013 04:11 PM

வகுப்புக் கலவரங்களில் இறந்த முஸ்லிம்கள் 66, இந்துக்கள் 41

முதல்முறையாக பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு

நாட்டில் இந்த ஆண்டு நிகழ்ந்த வகுப்புக் கலவரங்களில் இறந்தவர்களின் மத விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வகுப்புக் கலவரங்களில் இறந்தவர்களின் விவரங்களை மதம் வாரியாக பிரித்து மத்திய அரசு தகவல் வெளியிடுவது இதுவே முதல்முறை.

இந்த ஆண்டில் மட்டும் வன்முறையில் 107 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 66 பேர் முஸ்லிம்கள், 41 பேர் இந்துக்கள். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த முஸாபர் நகர் வன்முறை உள்பட கடந்த 9 மாதங்களில் 479 வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. மாநில வாரியாகப் பார்க்கும் போது உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 62 பேர் மத மோதல்களுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் 42 பேர் முஸ்லிம்கள், 20 பேர் இந்துக்கள்.

உத்தரப் பிரதேசத்தில் 93 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் எண்ணிக்கை மட்டும் 108.

மதரீதியான மோதல்களில் 1,697 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 794 பேர் இந்துக்கள், 703 பேர் முஸ்லிம் மதத்தவர். இதில் 200 போலீஸாரும் அடங்குவர்.

பிகாரில் 40 மத வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. இதில் 5 இந்துக்கள், 4 முஸ்லிம்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 123 பேர் இந்துக்கள், 66 பேர் முஸ்லிம்கள். 19 பேர் போலீஸார்.

குஜராத்தில் இந்த ஆண்டு 54 மத வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 21 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தலா 3 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 85 பேர் இந்துக்கள், 57 பேர் முஸ்லிம்கள்.

மகாராஷ்டிர மாநிலம் இந்த ஆண்டில் 56 மதக் கலவரங்களை எதிர்கொண்டுள்ளது. இதில் 3 இந்துக்கள், 7 முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். காயமடைந்த வர்களில் 101 பேர் இந்துக்கள், 106 பேர் முஸ்லிம்கள், 64 பேர் போலீஸார். இது தவிர 100 முறை மதமோதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x