Published : 29 Dec 2013 01:18 PM
Last Updated : 29 Dec 2013 01:18 PM

மக்களின் குறைகளைத் தீர்க்க புதிய முறை: 10 நாட்கள் அவகாசம் கேட்கிறார் கேஜ்ரிவால்

மக்களின் குறைகளைக் கேட்டு, அதற்கு தீர்வு காணும் புதிய அமைப்பை அடுத்த 10 நாள்களுக்குள் ஏற்படுத்த உள்ளதாகவும், அதற்கு பின்புதான் மனுக்களை பெறப்போவதாகவும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி...

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். அவரின் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை காலை ஏராளமான மக்கள் திரண்டனர். குறிப்பாக டெல்லி போக்குவரத்துக் கழக ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் குழுமியிருந்தனர்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நீக்க வேண்டும், அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும் என்று டெல்லி போக்குவரத்துக் கழக ஊழியர்களும் மாநகராட்சி ஊழியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் ஆதரவு தேவை

அவர்களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது: "நாங்கள் இப்போதுதான் பதவியேற்று இருக்கிறோம். புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்திய பின்பே, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவேன். இந்த அமைப்பை ஏற்படுத்த எனக்கு 10 நாள்கள் அவகாசம் கொடுங்கள். அதற்கு முன்பாக, மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அதை நிறைவேற்றித் தருவதாக தவறான வாக்குறுதிகளை அளிக்க நான் விரும்பவில்லை.

குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்படுத்தப்படவுள்ள அமைப்புக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மக்களின் ஆதரவின்றி பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது" என்றார்.

டெல்லி, உ.பி. போலீஸார் பாதுகாப்பு...

அர்விந்த் கேஜ்ரிவாலின் வீடு அமைந்துள்ள கௌசாம்பி பகுதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. டெல்லியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டுக்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் வரத் தொடங்கியுள்ளனர். கேஜ்ரிவால் நடத்தும் மக்கள் தர்பார் நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களின் குறைகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கேஜ்ரிவாலின் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் உத்தரப் பிரதேச மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர். டெல்லி போலீஸார் கேஜ்ரிவாலின் குடியிருப்பு வளாகத்துக்குள் தங்கியிருந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதியின் நுழைவு வாயிலில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், “முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை. மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும்படிதான் போலீஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x