

ஹரியாணா சட்டமன்ற தேர்தலில், இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி) சார்பில் தேவிலா லின் கொள்ளு பேரன் துஷ்யந்த் சிங்கை (26) முதல்வராக்க முயற்சிக்கப்படுகிறது. 4-வது தலைமுறை அரசியல்வாதியான துஷ்யந்த் தற்போது ஹிஸார் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
பஞ்சாபில் இருந்து 1966-ல் பிரிந்த ஹரியாணா, குடும்ப அரசியலுக்கு பெயர் போனதாக திகழ்கிறது. இம் மாநிலத்தை தேவிலால், பன்ஸிலால், பஜன்லால் என 3 லால்-கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்தனர். இதில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது பன்ஸிலால் குடும்பம். இரண்டாவதாக பஜன்லால், மூன்றாவதாக தேவிலால் குடும்பம் ஆட்சி செய்தது.
இதில் ஹரியாணா முதல்வராக வும் நாட்டின் துணை பிரதமராகவும் பதவி வகித்த தேவிலாலின் கொள்ளு பேரன் துஷ்யந்த் சிங். தற்போது எம்.பி.யாக இருக்கும் இவர் (மக்களவையின் மிகக் குறைந்த வயது உறுப்பினர்), ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் உச்சானா கலன் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேவிலாலின் மகனும் ஐ.என்.எல்.டி. தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியாணா முதல்வராக இருந்தபோது, 1999-ல் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் சிக்கினார். இவ்வழக்கில் தனது மகன் அஜய் சிங் சவுதாலாவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்ததால், அவர்களால் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இதையடுத்து அஜய் சிங்கின் மகன் துஷ்யந்த் சிங், ஹிஸார் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
இந்நிலையில் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது பேரன் துஷ்யந்தை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார். தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் துஷ்யந்தை அவர் முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் துஷ்யந்த் கூறும்போது, வேறு வழியின்றி எம்.பி. தேர்தலில் போட்டியிட வேண்டியதாயிற்று. தாத்தா மற்றும் தந்தையால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதே இதற்கு காரணம். இதே காரணத்துக்காகவே இப்போது சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வேண்டியுள்ளது” என்றார்.
இவர் போட்டியிடும் உச்சானா கலன் தொகுதி இவரது தாத்தா ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தொகுதி யாகும். கடும் போட்டி மிகுந்த இத் தொகுதியில் கடந்த 2009-ல் ஓம் பிரகாஷ் சவுதாலா வெறும் 621 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் சவுத்ரி வீரேந்தர் சிங்கை தோல்வியுறச் செய்தார். இம்முறை, பாஜகவில் இணைந்துவிட்ட வீரேந்தர் சிங் தனது மனைவி பிரேம்லதாவை, துஷ்யந்துக்கு எதிராக நிறுத்தியுள்ளார்.
அஜய் சிங்கின் தப்வாலி தொகுதியில் அவரது மனைவியும் துஷ்யந்தின் தாயுமான நைனா சிங் போட்டியிடுகிறார். நைனாவை எதிர்த்து அவரது கணவர் அஜய் சிங்கின் தாய் மாமன் டாக்டர் கமல்வீர் சிங், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 88-ல் ஐ.என்.எல்.டி.யும் 2 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளமும் போட்டியிடுகின்றன.