

ஆந்திராவை அச்சுறுத்திய 'ஹெலன்' புயல் மசூலிப்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமார் 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.
புயல் மழை காரணமாக வடஆந்திரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது, 2 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வடஆந்திரம் முழுவதும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
இந்நிலையில் புயல் கரையைக் கடந்திருந்தாலும், மேலும் 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, தெலங்கானா பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான ஹெலன் புயல் காரணமாக வடக்கு ஆந்திரப் பகுதிகளில் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடற்கரை யோரம் வசித்த 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிருஷ்ணா மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.