

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோக்பால் மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் கொடுத்தது.
லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கடந்த 50 ஆண்டுகளில் 8 முறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் 9 வது முயற்சி வெற்றியைத் தந்துள்ளது. இந்த மசோதா சட்டமாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து அமைச்சர்கள், எம்.பி.கள், உள்ளிட்ட உயர் அதிகார பதவியில் உள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை இது.
முன்னதாக, மாநிலங்களவையில் திருத்தியபடி உள்ள மசோதாவை, மக்களவையில் தாக்கல் செய்யவும் பரிசீலிக்கவும் அனுமதித்தார் அவைத்தலைவர் மீரா குமார். ஒரு மணி நேர ஒத்திவைப்புக்குப் பிறகு மக்களவை புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியதும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் மாநிலங்களவையில் திருத்தங்களுடன் நிறைவேறிய மசோதாவை பரிசீலனைக்காக தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பில் லோக்பால், லோக் ஆயுக்தா மசோதா, மக்களவையில் நிறைவேறியது.
சுஷ்மா ஸ்வராஜ்
விவாதத்தை தொடக்கி வைத்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்சுஷ்மா ஸ்வராஜ், இந்த சாதனைக்கான புகழ் தங்களைச் சார்ந்தது என காங்கிரஸ் கட்சி பெயர் தட்டிக் கொள்ள முயற்சிப்பதாக ஆட்சேபித்தார்.
ராகுல் காந்தி
ஆளும்கட்சி தரப்பில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “ஊழலை ஒழிக்க இந்த மசோதா மட்டும் போதுமானது அல்ல. ஊழல் ஒழிப்பு நடத்தை விதி நமக்கு தேவைப்படுகிறது. மசோதா நிறைவேறியதுடன் நின்றால் அது முழுமையற்ற நடவடிக்கைதான். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் ஒழிப்புக்கான செயல்திட்டத்தை வகுத்துள்ளது. ஏற்கெனவே தகவல் உரிமை சட்டம் கொண்டு வந்துள்ளோம்.
ஊழல் ஒழிப்பில் தொடர்புடையமேலும் 6 மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதால் அவற்றை நிறைவேற்ற கூட்டத் தொடரை நீட்டிக்க வேண்டும்” என்று யோசனை தெரிவித்தார்.
சமாஜவாதி கட்சி மற்றும் சிவசேனை ஆகியவற்றை தவிர மற்ற எல்லா கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்ததுபோல மக்களவையில் சமாஜவாதி கட்சி வெளிநடப்பு செய்தது.
“இந்த மசோதா ஆபத்தானது. இதனால் நாட்டில் ஒழுங்கு குலைந்து குழப்பம் ஏற்படும். மசோதாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாபஸ் பெறவேண்டும்” என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் வலியுறுத்தினார்.
லோக்பால் விசாரணை வளையத்தில் பிரதமர் அலுவலகமும் வருகிறது என்பதுதான் இதன் தலையாய சிறப்பு. இந்த சட்டம் அறிவிக்கையாக வெளியான ஒரு ஆண்டுக்குள் மத்திய அளவில் லோக் பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும்.